Wednesday, March 9, 2011

கனகாம்பரம்


மூன்றே விரல்களில்
அனாயசமாய் பூ கட்டும்
அக்காவின் வித்தையே
அலாதி தான்.
அவளுக்காகவே
நாள் தவறாமல் பூக்கும்
கனகாம்பரச் செடி!

வாழை நார் கிழித்து வந்து
தண்ணீரில் நனைத்து வைத்து
கனகாம்பரச் சரம் தொடுப்பதே
முன் மாலை நேரங்களில்
அக்காவின் முக்கியப் பணி.

மழைக்காலம்
முடிந்த ஒரு நாள்
வேர் வந்த குச்சிகளை
எங்கிருந்தோ வாங்கி வந்து
கிணற்றடியில் நட்டாள் அக்கா.
பக்கத்திலேயே இருந்து
ஆவலுடன் பார்த்திருந்தேன்.
"பாத்தி கட்டிய இடத்துக்கருகில்
பந்தடிக்கக் கூடாதடா..."
பக்குவமாய் சொல்லி வைத்தாள்.

ஒரு மாத காலம்
ஓடியதே தெரியவில்லை.
ஓரடி உயரத்துக்கு
ஒய்யாரமாய் வளர்ந்தது
டெல்லி கனகாம்பரம்!

ரெண்டு நாளுக்கு ஒரு முறை
அடுக்கடுக்காய் பூத்து தரும்.
கை நிறைய பறிக்கும் அக்கா
தலை நிறைய சூடிக்கொள்வாள்.

அக்காவை கட்டிக் கொடுத்த பின்
பூக் கட்டிச் சூட
ஆளே இல்லை வீட்டில்.
இருப்பவருக்கோ ஆர்வமில்லை.
அக்கா வராமல் வாடினாலும் கூட
பூப்பதை மட்டும் நிறுத்துவதில்லை
கனகாம்பரம் செடி!

Friday, January 8, 2010

கோலம்


எட்டு மணிக்கு எழும்பக் கூட
அடம் பிடிக்கும் மனசு.
மார்கழி மாதத்தில் மட்டும்
ஐந்துக்கெல்லாம்
வாசலில் ஆஜர்.

அக்கா போடும்
21 புள்ளி கோலம்
இன்றைக்கும் கூட
கண்ணுக்குள் நிற்கும் ஆச்சரியம்.

நேர் கோட்டில் புள்ளி வைத்து
என்னென்னவோ கணக்குப் பார்த்து
நெளிய நெளிய கோடுகள் போட்டால்
சாலை வரை நீளும்.

வகை வகையாய் கலந்து வைத்த
வண்ணப் பொடிகளை
கோலத்துக்கு நடுவே நிரப்புவது
எனக்கும் பிடித்த வேலை.

அத்துடன் முடிவதில்லை
அக்கா போடும் கோலம்.
நட்ட நடுவில்
பசுஞ்சாணம் பிடித்து வைத்து
ஏறிட்டுப் பார்ப்பாள்.

தெருவோர முட்புதர் பக்கம்
அவசரமாய் ஓடிப் போனால்
அன்றலர்ந்த பூசணி பூக்கள்
அழகாய் சிரித்திருக்கும்.
அவற்றில் ஒன்றை பறித்து வந்து
சாணம் மீது வைத்தால் தான்
கோலத்துக்கு நிறைவு.

மறுநாள் காலை வரை
வீட்டு வாசலில்
பிரமிப்பாய் வீற்றிருக்கும்.

தை பிறந்தால்
பொங்கல் வரும்.
ஆடை வரும்.
கரும்பு கூட வரும்.

ஆனால்,
அக்கா அசத்தும்
கோலத்துக்காகவேனும்
மார்கழி தான் வேண்டும்.

Thursday, January 7, 2010

ஊக்கு


தாறுமாறாய் ஓடிப் போய்
காலில் முள் ஏற்றிக் கொண்டால்
வீல் என்று அழுது கொண்டு
அக்காவிடம் ஓடி வருவோம்.

அக்காவுக்கு கூரான கண்.
டிஸ்கோ செயினுக்கு நடுவே
கோர்தது வைத்திருக்கும்
ஊக்கை எடுப்பாள்.
பதமாய் காலை பிடித்து
பக்குவமாய் எடுத்துவிடுவாள்.
எச்சை தொட்டு
வைத்து விட்டு
மீண்டும் ஓடுவோம்
விளையாட்டைத் தொடர.

மறுபடியும் முள் குத்தும்...
அக்காவின் ஊக்குக்கு
எப்போதும் கூர் மழுங்காது.

பல்பமோ...
பூச்சியோ...
காதுக்குள் விழுந்தவற்றை
ஊக்கால் தான் எடுத்திடுவாள்.
சட்டையில் பொத்தான்
பிய்ந்து போனால்
ஊசி தேடி ஓடுவதில்லை.
அக்காவிடம் கேட்டால்
ஊக்கு ஒன்றை மாட்டிடுவாள்.

மருத்துவர் வீட்டின் முன்
போன வாரம் அக்காவை பார்த்தேன்.
கடிகார பேட்டரியை
காதுக்குள் போட்டுக் கொண்டானாம்
அக்காவின் இளைய மகன்.

கல்யாணம் ஆன பிறகு
டிஸ்கோ செயின் போடுவதில்லை.
அதனால் தான் அக்காவுக்கு
ஊக்கு எதுவும் கிடைக்கவில்லை.

Friday, October 30, 2009

சங்குப் பூ


செம்பருத்தியை தொட்டால்
அக்காவின் அலறலில்
வீடே அதிரும்.
மல்லியை மனதில் கூட
நினைக்கக்கூடாது.

புள்ளையாருக்கு
மாலை கட்டி விளையாட
சங்குப்பூ தான் சிறப்பு.

வேலியோரம்
படர்ந்திருக்கும்
நீல நிற பூக்களை
என்னைத் தவிர யாரும்
கண்டுகொள்ளாதது
வசதி தான் எனக்கு.

மண்டையை கொளுத்தும்
வெயில் நாளில்
நிழலிலேயே விளையாட
பொம்மைகள் ஏதும் தேவையில்லை.
சங்குப்பூவில்
சமையல் செய்வோம்.

கண் மண் தெரியாமல் ஓடி
சில்லறை வாரி
சிராய்ப்பு வந்தால்
சங்குப் பூ தான் முதலுதவி.

ஆப்பி பர்த்டே சொல்லி
பக்கத்துவீட்டு பெண்ணுக்கு தந்த
பிறந்த நாள் பூச்செண்டிலும்
சங்குப்பூ தான் பிரதானம்.

ரொம்ப நாள் என் கூடவே
வளர்ந்து கொண்டிருந்து
சங்குப்பூக் கொடி.

வேறு வேறு வீடு மாறி
அடுக்குமாடி குடியிருப்பில்
அடைந்து கொண்டோம்
ஒரு வழியாய்.

இப்போதெல்லாம்
சங்குப்பூவும் காணோம்...
அது படர்ந்திருந்த
வேலியையும் காணோம்...

Thursday, October 29, 2009

ரவா லட்டு

அம்மா சமைப்பதில்
அத்தனையும் பிடிக்கும்.
ஆனாலும்
அதிகமாய் கவர்வது
ரவா லட்டு.

பண்டிகையோ படையலோ
தேவையில்லை.
ஏதேனும் செய்வோமென்று
அம்மாவுக்கே தோன்ற வேண்டும்.

வானலியை அடுப்பில் வைத்து
சர்க்கரையும் ரவையும் சேர்த்து
பக்குவமாய் வறுத்தெடுப்பாள்.
வீடெங்கும் பரவும் நெய் வாசம்.

பதமான சூட்டில்
பால் தெளித்து
உருட்டி உருட்டி
பிடித்து வைப்பாள்.
தட்டிப் போட்ட
ஏலக்காயும்
துருத்திக் கொண்டு பார்க்கும்
முந்திரி திராட்சையும்
தொண்டைக்குள் செல்ல
முண்டியடிப்பதாய் தோன்றும்.

சாமி படத்துக்கு முன்னால்
ஓரிரண்டு வைத்துவிட்டு
அப்பாவுக்கு வரும் முதல் தட்டு.
அதற்குள்,
குழந்தைக்கு கொடு என்ற
குரல் வரும் அப்பாவிடம் இருந்து.

வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும்
வேண்டாமென்று சொல்ல
தோன்றாது எனக்கு.

அதன்பின் எங்கெங்கோ
சாப்பிட்டிருக்கிறேன்
ரவா லட்டு.
அம்மா கை பக்குவம் போல்
எதுவுமே இருந்ததில்லை.

மனம் ஒன்றி செய்யும் ருசி
மனசுக்கு நிச்சயம் தெரியும்.

Saturday, August 29, 2009

பேனா


அப்பா சட்டைப் பையில் இருந்து
எட்டிப் பார்க்கும் பேனா மீது
எப்போதுமே கண் உண்டு எனக்கு.

என்னிடமே வகை வகையாய்
எத்தனையோ பேனா உண்டு.
மைக்குச்சி பேனா -
மை ஊற்றும் பேனா -
வாசனை மை பேனா -
விதவிதமாக இன்னும்
பல வண்ண பேனா...

அடுக்கி வைத்திருக்கும்
பேனாக்களைப் பார்த்து
சூடாகிப் போவாள் அம்மா.
மேஜை அறையை
திறந்து பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
தப்பாமல் விழும் திட்டு.
அறுக்க மாட்டாதவன் இடுப்பில்
அம்பத்தெட்டு அரிவாளாம்...

ஆனாலும் குறைவதில்லை
பேனா மீதான மோகம்.

வேகமாய் குறிப்பெடுக்க
மைக்குச்சி பேனாவுக்கு
இணை தேட முடியாது.
பள்ளிப் பாடங்கள் எழுதவோ
மை பேனா தான் வேண்டும்.
விரல் இடுக்கில் மை ஒழுகி
கரையாகிப் போனாலும்
எழுத்துகள் அழகாய் வரும்.

அப்பா பேனா மீது
பொறாமை ஏற்பட
காரணம் இல்லாமல் இல்லை.
தங்க நிறத்தில் தக தகக்கும்.
எழுதத் தொடங்கினால்
விறுவிறுக்கும்.
ஒவ்வொரு வார்த்தையும்
வீரியத்தில் கதிரியக்கம்.

ரொம்ப நாள் எனக்கும்
நிறைவேறாத ஆசை.
அப்பா பேனாவால் எழுதியிருந்தால்
பரீட்சையில் அள்ளியிருப்பேன்
நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்.

அதனால்,
அப்பா சட்டைப் பையில் இருந்து
எட்டிப் பார்க்கும் பேனா மீது
எப்போதுமே கண் உண்டு எனக்கு.

Wednesday, September 17, 2008

குல்ஃபி

நடு நிசி நெருங்கும் போது
வீதியில் மணியோசை கேட்டால்
மனசுக்குள்ளே உற்சாகமும்
மணி அடிக்கும்.
வந்து விட்டது
குல்ஃபி ஐஸ்.

சுகாதாரம் இல்லை என்றோ
உடம்புக்கு ஆகாது என்றோ
அம்மா சொல்வது எப்போதும்
காதில் விழுவதில்லை.
வண்டி போய்விடக் கூடும்
என்ற அவசரம்
புரிவதில்லை அம்மாவுக்கு.

காது கிழியும் அளவுக்கு
வீல் என்று சப்தமிட்டு
ஒவ்வொரு முறையும் அடம்பிடிப்பது
எனக்கும் அம்மாவுக்கும்
புதிதும் இல்லை...
அலுப்பதும் இல்லை.

இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு
ஓட்டமாய் ஓடிப்போனால்
எனக்கு முன்னே
நிறைய பேர் சூழ
நின்றிருப்பான் ஐஸ் வண்டிக்காரன்.

சின்னச் சின்ன
பிளாஸ்டிக் டப்பாவுக்குள்
இறுகியிருக்கும் ஐசை
கத்தியை விட்டு லாவகமாய் எடுத்து
குச்சி ஒன்றில் குத்தி
கையில் திணிப்பான்.

வாங்கி வரும் ஐஸ்
கொஞ்ச நேரத்திலேயே கரைந்து
தொண்டைக்குள் இறங்கி விடும்.
மீண்டும் ஒருமுறை
வாங்கலாம் என்று
வீதிக்குப் போய்ப் பார்த்தால்
வண்டிக்காரன் போயிருப்பான்.

அதுவும் நல்லது தான்.
மறுபடி காசு கேட்டால்
அரை விழும் எனக்கு.
இஷ்டம் போல்
குல்ஃபி ஐஸ்
வாங்கிச் சாப்பிடவாவது
பெரியவன் ஆகவேண்டும்.
நினைத்துக் கொள்வேன் நான்.

அலுவலகம் முடிந்து வந்த அசதியில்
இப்போதெல்லாம்
கேட்பதில்லை
குல்ஃபி மணியோசை.
அப்படியே கேட்டாலும்...
விறுவிறுவென ஓடிப்போய்
வீதியில் நின்று வாங்குவதை
ஏதோ ஒன்று தடுக்கிறது.

லேசாய் உப்பு கரித்தபடி
ஏலக்காய் வாசத்துடன்
இனிக்க இனிக்க
குல்ஃபி ஐஸ் சாப்பிட்டு
எத்தனையோ நாள் ஆகிவிட்டது.

ஐயையோ...
சின்னப் பையனாகவே
இருந்திருக்கலாமோ...?